Wednesday, 28 September 2016

மருதநாயகம் வரலாறு - History of Marudhanayagam (1725 – 15 October 1764)

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதது மருதநாயகம் எனும் கான்சாஹிப்பின் வரலாறு. அதை புரட்டிப் பார்ப்போம்!

இவர், திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி மற்றும் பூலித்தேவனின் சமகாலத்தில் வாழ்ந்தவர். மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம், முகம்மது கான் சாஹிப் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார். மதுரை அருகே உள்ள பனையூரில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார். வீர,தீர சாகசங்களில் சிறந்து விளங்கினார்.

இவர் தனது முதல் ராணுவ அனுபவமாக, தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டு ஆட்சி புரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹனின் படையில் சிறிது காலம் பணி புரிந்தார். பின்னர் புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு படையில் சாதாரண படை வீரராக சேர்ந்தார். அவருடைய அறிவு, தலைமைப்பண்பு, போர் நுட்பம் ஆகியவை பிரெஞ்சு தளபதிகளை வியக்க வைத்தது. அதன் விளைவாக குறுகிய காலத்தில் பல முக்கிய பதவிகளை பெற்றார்.

இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதில் கோபம் அடைந்த மருதநாயகம், ஆங்கிலேயப் படையில் இணைந்தார்.

ஆங்கிலேயர் படையில் இணைந்த சில காலங்களில், மைசூர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஹைதர் அலியை மருதநாயகம் தோற்கடித்தார். இதனால் புகழின் உச்சிக்கே அவர் கொண்டு செல்லப்பட்டார். தெற்கு சீமையின் கவர்னராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். மக்களை காப்பதிலும், அவர்களின் வாழ்வை உயர்த்துவதிலும், மருதநாயகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார். விவசாயம்தான் நாட்டின் உயிர்நாடி என்பதை உணர்ந்து, அதற் காக அனைத்து வகையிலும் பாடுபட்டார். ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கொடைக்கானலுக்கு முதல் முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் ஆட்சியில் தான். திறமையான ஆட்சியால் அவரை மக்கள் கொண்டாடினார்கள்.

இவை எல்லாம், ஆற்காடு நவாப்பாக இருந்த முகம்மது அலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்கக்கூடாது என்று ஆற்காடு நவாப்பால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆற்காடு நவாப்பிடம் கப்பம் கட்டுமாறு மருதநாயகத்திற்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். இதனை மருதநாயகம் ஏற்க மறுத்தார். அதன்பிறகே, ஆங்கிலேயர் களின் சூழ்ச்சியை மருதநாயகம் உணர்ந்தார். அதன் விளைவு, நாட்டை நாமே ஏன் ஆளக்கூடாது? என்ற சிந்தனை மருத நாயகத்துக்கு உதித்தது.

1763-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு, தன்னுடைய கொடியான மஞ்சள் நிற கொடியை ஏற்றினார். அத்துடன் பிரெஞ்சுக் காரர்களின் கொடியையும் ஏற்றி பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது.

மருதநாயகத்தை வீழ்த்த ஆங்கிலேயர் படை 3 முறை படையெடுத்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் போரிட்டும் ஆங்கிலேயர் படை தோல்விகளையே தழுவியது. அவரை, வீரத்தால் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்களும், ஆற்காடு நவாப்பும், சூழ்ச்சியால் வீழ்த்த முயற்சித்தனர். அதன்படி, மருதநாயகத்தின் அமைச்சர் சீனிவாசராவ் உள்பட சிலரை கைப்பாவையாக்கினார்கள்.

இதையடுத்து, 1764-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி மருதநாயகம் தனது கோட்டையில் தனி அறையில் தொழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசராவ் உள்ளிட்டோர் மருதநாயகத்தை சிறைபிடித்து, ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைத்து விட்டனர். மருதநாயகத்திற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1764-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரமாண்டமான மாமரத்தின் கிளையில், வலுவான தூக்குக்கயிற்றில் தூக்கிலிடப்பட்டார். 2 முறை தூக்கிலிட்டும் சாகவில்லை. புதிய கயிறு தயாரிக்கப்பட்டு, 3-வது முறையாக தூக்கிலிடப்பட்டார். இதில் அவர் இறந்து விட்டார். நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டு, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பிறகே உடல் இறக்கப்பட்டது. 3-வது முறை தூக்கில் போடும் முன்பு அவர் காலில் கட்டி இருந்த தாயத்தை அகற்றியதாகவும், அதன்பிறகே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மருதநாயகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாக செய்தி பரவியது. இதனால் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி வெளியே எடுக்கப்பட்டு, உயிர் இருக்கிறதா? என்று ஆங்கிலேயர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். பின்பு உடலை பல பாகங்களாக வெட்டி, பல இடங்களில் புதைத் துள்ளனர்.